Thursday, November 27, 2008

மும்பையில் பயங்கரவாத தாக்குதல்

இந்தியாவின் பொருளாதாரத் தலைநகரான மும்பையில் பயங்கரவாதிகள் நடத்தியுள்ள மிகப்பெரிய தாக்குதல் நடவடிக்கைகளில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். சுமார் 300 பேர் காயமடைந்துள்ளனர்.

கடைசியாக கிடைத்த விபரங்கள்

துப்பாக்கிதாரிகளால் முற்றுகையிடப்பட்டிருந்த இரண்டு முன்னணி விடுதிகளின் கட்டுப்பாட்டை முழுமையாக மீட்டெடுக்க பாதுகாப்புப் படையினர் முயன்றுவருகிறார்கள். ஓபராய் விடுதியில் பணயக் கைதிகள் பிடித்துவைக்கப்பட்டுள்ளதாகவும் தாஜ் மஹால் விடுதியிலிருந்தவர்கள் விடுவிக்கப்பட்டுவிட்டார்கள் என்றும் மாநில காவல்துறை தலைவர் தெரிவித்துள்ளார். ஆனாலும் தாஜ் மஹால் விடுதியில் மேலும் சிலர் சிக்கியிருக்கவே செய்கின்றனர். ஒவ்வொரு அறையாக பாதுகாப்புப் படையினர் சோதனை நடத்திவருகிறார்கள். அவ்விடுதியிலிருந்து சில வெடிப்புகளும் துப்பாக்கி சத்தமும் கேட்கக்கூடியதாக இருக்கிறது. தாக்குதல்கள் நடந்த வேறு எட்டு இடங்களையும் பொலிஸாரும் இராணுவத்தினரும் தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துவிட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
தாக்குதலாளிகள் ஒரு படகில் வந்ததாக அதிகாரிகள் கூறுகின்றனர். அவர்களில் நான்கு பேர் கொல்லப்பட்டும் ஒன்பது பேர் கைதுசெய்யப்பட்டும் இருப்பதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

முன்னதாக கிடைத்த விபரங்கள்

மும்பை சம்பவம் தொடர்பாக நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சி மூலம் உரையாற்றிய பிரதமர் மன்மோகன் சிங், இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட கும்பல், வெளிநாட்டிலிருந்து வந்ததாகக் குறிப்பிட்டுள்ளார். அதுதொடர்பாக, அண்டை நாடுகளிடம் எடுத்துச் செல்லப்படும் என்று கூறியுள்ளார்.

சந்தேகத்துக்குரிய நபர்கள் இந்தியாவுக்குள் நுழைவது தடுக்கப்படும் என்றும், பயங்கரவாதிகளுக்கான நிதி இந்தியாவுக்கு வருவதை முடக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பிரதமர் உறுதியளித்துள்ளார்.

பயங்கரவாதக் குற்றங்களை விசாரிக்க, மத்திய விசாரணை அமைப்பு ஒன்று ஏற்படுத்தப்படுவது அவசியம் என்றும், தற்போதுள்ள தேசிய பாதுகாப்புச் சட்ட விதிகள் மேலும் கடுமையாக்கப்படும் என்றும் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் தலைவர் சோனியா காந்தி இதுபற்றிக் கருத்துத் தெரிவிக்கும்போது, இந்த நெருக்கடியான நேரத்தில் அனைவரும் ஒன்றுபட்டு நிற்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

தாக்குதல் நடந்த இடங்கள் வரைபடத்தில்...


'டெக்கான் முஜாஹிதீன்' என்ற புதிய அமைப்பு இந்த பயங்கரவாத தாக்குதல்களுக்கு பொறுப்பேற்றுள்ளது.
புதன்கிழமை இரவு சுமார் 9.30 மணிக்கு முதல் தாக்குதல் தொடங்கியது. முக்கிய ரயில் நிலையம், மருத்துமனை உள்பட பல இடங்கள் தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கின்றன.
இந்த பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு பிரிட்டிஷ் பிரதமர் கோர்டன் பிரவுன், அமெரிக்க ஜனாதிபதி ஜார்ஜ் புஷ், அமெரிக்க அதிபராகத் தேர்வு செய்யப்பட்டுள்ள பராக் ஒபாமா உள்பட பல்வேறு உலகத் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

சர்வதேச விமானங்கள் ரத்து

மும்பையில் இருந்து உலகின் வேறு பகுதிகளுக்கு செல்லும் பெரும்பாலான விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. ஆனால் உள்ளூர் விமான சேவைகள் பல இயங்குகின்றன.

நகரில் பதற்றம்

மும்பையில் பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கை சுமார் 16 மணி நேரங்களாக தொடர்ந்து நடந்துவரும் நிலையில், நகரின் இயல்பு வாழக்கை பாதிக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் ஊரடங்கு உத்திரவு அமலில் உள்ளது. பள்ளிக்கூடங்கள், அரசு அலுவலகங்கள், பங்கு சந்தை உள்ளிட்டவை வியாழனன்று மூடப்பட்டுள்ளன. நகரின் சாலைகள் வெறிச்சோடிக் காணப்படுகின்றன. மக்கள் தத்தமது வீடுகளிலேயே இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

நன்றி (BBC Tamil)

No comments: